Kavitai | Kathaikal | Vimarsanam | CookingTips | Proverbs | Movie Links | TamilCalender
Joke

Your Ad Here
Star
மாற்றம்


  "எலக்ட்ரிக் பில்லைச் சீக்கிரம் கட்டிடுடா செல்வம்".

"அது எனக்குத் தெரியாதாப்பா? நாளைக்கு ஆபீஸிலே பெர்மிஷன் போட்டுட்டுன்னாலும் போய்க் கட்டிடறேன். கொஞ்சம் அமைதியாத்தான் இருங்களேன்? இன்னொரு தடவை சொன்னாச் சட்டுன்னு கோபம் வந்திடறது உங்களுக்கு... சமீபகாலமா னீங்க ரொம்பத்தான் மாறிட்டீங்கப்பா"

"யாருப்பா, நானா?" சிரித்தார் அப்பா, "நீ தாண்டா அடியோட மாறிட்டே". "என்ன்ப்பா சொல்றீங்க?"

"செல்வம், நீ குழந்தையா இருந்தப்ப, உனக்குக் கதை சொல்வேன். இன்னொரு தடவை சொல்லச் சொல்லுவே, நானும் சளைக்காமே திரும்பத் திரும்ப அதே கதையை எத்தனை தடவை சொன்னாலும் நீ கேட்டிட்டே இருப்பே, சில சமயம் உனக்கு தூக்கம் வர்ற வரைக்கும் ஒரே கதையைத் திருப்பித் திருப்பிச் சொல்லியிருக்கேன். இப்படி ஒண்ணொண்ணையும் பல தடவை கேட்டுத்தான் நீ வளர்ந்திருக்கே. இப்ப என்னடான்னா, எதையாச்சும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கேட்க வேண்டி வந்திட்டா உனக்கு வர்ற கோபம்... இப்ப சொல்லுடா, நீ மாறிட்டியா இல்லே நானான்னு?"

மௌனமாகத் தலை குனிந்தேன், நான்.

படிக்கிற வயசுல


  பாரதி மெஸ் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளில் இருபது டிபன் கேரியர்கள் அடுக்கப்பட்டிருக்க, அதனை நகர்த்திக் கொண்டு வேலு புறப்படத் தயாரானான்.

"வேலு, போற வழில ரோட்டரி கான்வெண்ட்ல எம் பேரன்கிட்ட குடுத்திடு" ஹர்ட் பேக்கை நீட்டினாள் பாரதி மாமி. "என்ன மாமி விசேஷம்?"

"விசேஷம் ஒண்ணுமில்லைடா. காலைல கொண்டுபோறது ஆறிப்போய் சாப்பிட கஷ்டமா இருக்கு. எனக்கும் வேலுமாமா கிட்டயே கேரியர் குடுத்து அனுப்பிடுன்னான். இனி தெனமும் குடுத்துடு, என்ன?"

"இல்ல மாமி இன்னைக்கு ஒருநாள் குடுக்கறேன். நாளையிலிருந்து வழக்கம்போல காலைலயே குடுத்து அனுப்பிச்சிடுங்க". "ஏண்டா?"

"படிக்கிற பசங்க பசிக்குத்தான் சாப்பிடணும்னு எங்கப்பா சொல்வாரு. நான் கேட்டதில்லை. இப்ப வாட்ச்சுமேன் வேலைலருந்து வாரிக் கொட்ற வேலை வரைக்கும் எல்லாத்தயும் செய்யறேன்.படிக்கிறப்போ சூடா சாப்பிடணும். சொறணையா திங்கணும்னு புத்தி போனதால இந்த நிலமை. என்ன சாப்பாடுன்ற யோசனைலயே கடைசி பீரியட் பாடம் போயிடும்.அதே தப்பை நம்ம வீட்டுப் புள்ளை செய்யறதுக்கு நானே காரணமா இருக்க மாட்டேன்."

தீர்மானமாய்ச் சொல்லிவிட்டு சைக்கிளை மிதித்தான் வேலு.

ஆறுதல்


  நகரின் பிரபல டாக்டர் ஷ்யாம் சுந்தரின் விழிகள், பழகிப் போன அந்தச் சாலையின் இடது ஓரத்தில், புதிதாக முளைத்திருந்த அந்த ராட்சசவிளம்பர பேனரில் குத்தவே, காரை ஓரம் காட்டினார். மனம் அசை போட்டது....

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், மகனுக்கும் அவருக்கும் நடந்தது ஒரு மௌன யுத்தம். இருபத்தைந்து ஆண்டு கடும் உழைப்பால் தான் உருவாக்கியிருந்த மருத்துவ மனையின் பொறுப்பினை தனக்குப்பின் தன் ஒரே மகன் கமல்காந்த் ஏற்கவேண்டும். அதற்காக அவன் மருத்துவம் படிக்க வேண்டும் என அவர் வற்புறுத்தினார். ஆனால்,அவனுக்குத் தீராத சினிமா மோகம்.

கருத்து மோதலால் வீட்டை விட்டு வெளியேறிய தன் மகன் கதாநாயகனாக நடித்த முதல் படம் இன்று வெளியாகியிருக்கிறது. அவனது சாதனையில் அவருக்கு பெருமையோ மகிழ்ச்சியோ சிறிதும் இல்லை. இருந்தும் உதட்டில் ஒரு புன்னகை.

விளம்பர பேனரில் அவரது மகன் கமல்காந்த், கழுத்தில் ஸ்டெத்தஸ் கோப்புடன் டாக்டர் கெட்டப்பில் சிரித்துக் கொண்டிருந்தான்.

மனைவி


  மெரீனா கடற்கரை..... காற்று சுகமாய் இருந்தது. "சொல்லு விக்னேஷ். சியாமளா பற்றி என்னவோ பேசணும்னு சொன்னியே....."

"என் மனைவி சியாமளா சரியில்லை பாரதி. டார்ச்சர். நேத்து வீட்டுக்குப் போனபோது, இரண்டு பசங்களும் ஒரே ரகளை. 'டி.வி.'யைப் போடாதேன்னு இவ சொல்லியிருக்கா. பசங்க கேட்காததால, 'ரிமோட்டை'ப்போட்டு உடைச்சுட்டா...." "மை காட்!" - பாரதி அதிர்ந்தான். விக்னேஷ் தொடர்ந்தான்.

"அதைவிடு... யூ நோ. எங்க அம்மா என்கூட இருக்கக்கூடாதாம். உங்க தம்பிக்கிட்ட போய் இருக்க வேண்டியதுதானேன்னு பிரச்சனை. சண்டை ஒண்ணு கேட்டா ஒண்ணு செய்ய வேண்டியது. அம்மாவோட வயசு 70. அம்மாவை போட்டியா நினைக்கவேண்டியது. 'நீங்க ஒரு நாள் 'கான்வென்ட்' போய் பையனை கூட்டிக்கிட்டு வாங்க'ன்னு அம்மாவை அனுப்பியிருக்கா. மூட்டு வலியோட அம்மா போயிருக்காங்க" விக்னேஷ் கண்களில் நீர் முட்டியது.

"அப்பா காலமான பிறகு, அம்மா வெளியே வர்றதேயில்லை.தள்ளாமை வேற. ஆனா, சியாமளாவோட டார்ச்சர்? சொல்லிச் சொல்லி அழறாங்க. தினம் தினம் ஆபிஸ்விட்டு ஏண்டா வீட்டுக்குப் போறோம்னு இருக்கு."

"விக்னேஷ் இதெல்லாம் போகப் போகச் சரியாயிடும்". "கல்யாணம் ஆகி எட்டு வருஷம் ஆச்சுடா. இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கணும்? கல்யாணம் பண்ணிக்கிட்டாலே பிராப்ளம்தாண்டா. நூத்துக்கு தொண்ணூறு பேர் அல்லாடறான்.

தொண்ணூறிலேதான்டா உன் தங்கையைக் கட்டிக்கிட்ட நானும் இருக்கேன்...." என்றான் விக்னேஷ். "ஸாரிடா மச்சான்....." என்றான் பாராதி.

அன்பு


  "ஆபீஸ் முடிந்ததும் நேராக நண்பர் கோபுவின் வீட்டிற்கு வந்தான் ராமநாதன். கோபுவின் மனைவி காபி கொடுத்து அவனை உபசரித்தார். நண்பர்கள் ஆபீஸ் விஷயமாக ஏதோ சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது கோபுவின் மகன் 'பிராகிரஸ் கார்டு' கொண்டுவந்து தர, மார்க் குறைந்திருந்தும் கோபு அதில் கையொப்பமிட்டு திரும்பத்தந்தான். "ஏம்ப்பா பையனை அடிகலையா....?"

"இல்லைப்பா.... நான் அடிக்க மாட்டேன்..." "என் பையன் பிராகிரஸ் கார்டு கொடுத்தால் மார்க் குறைஞ்சிருந்தா பின்னி எடுத்து விடுவேன்" என்று ராமாநாதன் பெருமிதமாகச் சொன்னான்.

அன்றிரவு வீட்டுக்கு வந்த ராமநாதன் மனைவியிடம் 'அவனது மகன் பிராகிரஸ் கார்டு தந்தானா? எனக் கேட்க அவள் "இல்லை" என்றாள். ஒரு வாரம் சென்றிருக்கும். அவனது மகன் படிக்கும் ஸ்கூலில் இருந்து போன். நேரில் சென்றவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

"மிஸ்டர் இராமநாதன் உங்க பையன் செய்த வேலையைப் பார்த்தீர்களா? பிராகிரஸ் கார்டில் உங்கள் கையெழுத்தை அவனே போட்டுக் கொண்டு வந்திருக்கான். மிரட்டிக் கேட்ட பிறகு தான் ஒப்புக் கொண்டான்".

"ஏற்கெனவே நான் அவனை ஸ்டிரிக்டா வளர்க்கிறேன். இன்னைக்கு அவனை அடிச்சி துவைச்சிடுறேன்" என்றான் இராமநாதன்.

"சார், நீங்க அங்கதான் தப்பு செய்றீங்க. உங்க பையனிடம் முரட்டுத்தனமா நடந்து கொள்வதால்தான் அவன் இப்படிச் செய்துவிட்டான். இனிமேலாவது அவனிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.அவன் படிப்பில் குறையிருந்தால் எங்களிடம் பேசுங்கள்". 'சரி' என்று புறப்பட்டான் இராமநாதன், கோபுவின் ஞாபகம்தான் வந்தது அவனுக்கு.

வியாபாரி


  கொஞ்ச நாளாவே டல்லா இருக்கியே என்ன காரணம்னு தெரிஞ்சா, என்னால முடிஞ்ச உதவியைச் செய்யறேன்." - சோர்வுடன் இருந்த கணேசனைப் பார்த்துக் கேட்டார் ரகுபதி.

" "என்கிட்டே கை கட்டி வேலை செஞ்சு, தொழில் கத்துகிட்டு எனக்கு எதிரிலேயே கடை திறந்து இருக்கானே பழனி, அதைத்தான் என்னால தாங்கிக்க முடியலை.
"
" இடிந்து போன குரலில் சொன்ன கணேசனின் தோளை, ஆதரவுடன் தட்டிக் கொடுத்தார் ரகுபதி.

" "வியாபாரத்தில் இதெல்லாம் ரொம்ப சகஜம் கணேசா. எவ்வளவு நாளைக்குத்தான் பழனி தொழிலாளியாகவே இருப்பான்? அவனுக்கும் முதலாளியாக வேண்ட்ம் என்ற ஆசை இருக்காதா?"

" "அதற்காக என் கடைக்கு எதிரிலேயே கடையைத் திறந்து என் வியாபாரத்தைக் கெடுப்பதா?"

" "இங்கேதான் நீ தப்புப் பண்றே. பழனிக்கு இருக்கிற தன்னம்பிக்கை உனக்கு இல்லாமல் போயிடுச்சே. உன் கடைக்கு எதிராகக் கடை திறந்தால் என்ன ஆகும் என்று எண்ணிப் பார்க்காமலா பழனி கடையைத் திறந்திருப்பான்? எப்படியும் ஜெயிக்கலாம் என்று அவனுக்கிருக்கும் நம்பிக்கை உனக்கேன் இல்லை. யார் கடையில் பொருளும் சேவையும் உயர்வாக இருக்கிறதோ அங்கே மக்கள் வரப்போறாங்க. பழனிக்குத் தெரிந்த உண்மை ஏன் உனக்குத் தெரியவில்லை. முதலில் நீ அவனைப் பற்றி சிந்திப்பதை விடு.

"தொழிலைப்பார் ஆல் தி பெஸ்ட்" கணேசனின் கையைப் பிடித்துக் குலுக்கினார் ரகுபதி.

more stories...
Star Photo
Joke

Tell a Friend:

Copyright © 2006 CineChips.com All Rights Reserved.
Site Meter