|
உறுதி |
  வெளிநாட்டு டூரிஸ்ட்டுகள் கூட்டத்திற்கு அன்று அரவிந்து தான் கைடு.
பஸ் ஒடிக்கொண்டிருக்கையில் மைக்கில் அறிவித்தான். "வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களை இன்று
பார்க்கப் போகிறோம்".
தாஜ்மஹலை அடைந்தது பஸ்.
"உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹலின் சிறப்பே இதன் கட்டட அமைப்புத்தான்.
விஞ்ஞானம் வளர்ச்சியடையாத பல நுற்றாண்டுகளுக்கு முன்பே இத்தனை உறுதியாகவும்,
பிரமாண்டமாகவும் கட்டியுள்ளார்கள்......"
அடுத்து ஒரு பழமையான அரண்மணை
"ஃப்தேப்பூர் சிக்ரி என்ற சரித்திரப் பிரசித்தி வாய்ந்த இந்தக் கோட்டையின் ஆடிட்டோரியத்தின் இந்த மூலையில் ஒரு வத்திக்குச்சியை மெதுவாகப் பற்றவைத்தால், சுமார் முந்நூறு
மீட்டர் தொலைவிலுள்ள அந்த எதிர் மூலையில் சப்தம் துல்லியமாகக் கேட்கும். நூற்றூக்கணக்கான ஆண்டுகளாக கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் இந்தக் கட்டடங்களின் நுட்பமும் ,சிறப்பும் எங்கள்
நாட்டிற்கே உரிய தனிச்சிறப்பாகும்" - கேட்ட்வர்கள் வியந்தனர்.
சுற்றுல முடிந்து வீடு திரும்பினான் அரவிந்த்.
எந்த நிமிடம் இடிந்து விழுமோ என்று பயப்படுமளவிற்குப் பரிதபமாக நின்று
கொண்டிருந்தது அவன் வீடு.
|
|
தெளிவு | |
  அலுவலகத்திலிருந்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்தாள் மல்லிகா.
அதே நேரத்தில் அவளது கணவன் ரமேஷும் வந்து சேர்ந்தான்.
"என்னங்க! இன்று நான் கண்ணாடியைப் பார்த்ததும் அதிர்ச்சியாகிவிட்டேன்.
ஒரு வயது முதிர்ந்த பெண்ணின் முகம் தான் அதில் தெரிந்தது. முகத்தில் தோல் சுருங்கி,
கண்களைச் சுற்றி கருவளையம் படர்ந்து... கிட்டத்தட்ட கிழவி போல் தெரிந்தது. உடலும் பருத்துவிட்டது"
".........."
"நான் எவ்வளவு வேதனையோடு உங்ககிட்ட என் நிலைமையைச் சொல்கிறேன்.
ஒன்றுமே பேசாமலிருக்கிறீர்களே! ஏதாவது
ஆறுதலாகச் சொல்லக் கூடாதா? வாயைத்
திறந்து ஏதாவது சொல்லித் தொலையுங்களேன்!" மல்லிகா விடாப்பிடியாக
வற்புறுத்தினாள்.
ரமேஷ் ஏதாவது சொல்லியாக வேண்டும்
என்பதை உண்ர்ந்துவிட்டான்.
"மல்லிகா! ஆனாலும் உன் கண் பார்வை எவ்வளவு
துல்லியமாக இருக்கிறது! இந்த வயதிலும்
கொஞ்சம் கூட மங்கவில்லையே!"
|
|
அதிர்ச்சி | |
  இண்டர்வியூ டென்சன் அருணின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. பஸ்ஸிலிருந்த
கூட்டம் வேறு அவனது எரிச்சலை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. கையிலிருந்த பொது அறிவுப்
புத்தகத்தைப் புரட்ட முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
அவன் அமர்ந்திருந்த இருக்கையின் அருகில் ஒரு கர்ப்பிணிப் பெண் நின்று
கொண்டிருந்தது, அவனது அசைவை சிறைப்படுத்தியது போலிருந்தது.கால்களை முடக்கி வைத்துக்
கொள்ள வேண்டியிருந்தது.
அப்பொழுது அந்தப் பெண்ணின் அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெரிய மனிதர்,
'தம்பி! கொஞ்சம் எழுந்து, இந்தப் பெண்ணுக்கு இடம் தரக் கூடாதா?' என்றார். அவ்வளவு
தான்! அவனுள் அடைபட்டுக்கிடந்த எரிச்சல் பொங்கி வழிந்து வார்த்தைகளாய் வெடித்தது.
"ஏன் சார்! இந்த நெரிசலில் இப்படிப் பெண்கள் ஏறித்தான் ஆகணுமா? உங்களுக்கு அவ்வள்வு
அக்கறை இருந்தால் இறங்கி ஒரு கார் அமர்த்தி அந்தப் பெண்ணை அழைத்துக்
கொண்டு போக வேண்டியது தானே?"
பெரியவர் பதில் பேசவில்லை. தனது கார் அன்று சரியில்லாமற் போனதால்தான் பஸ்ஸில் போக
வேண்டியதாகி விட்டது என்று அவர் அவனிடம் சொல்லிக் கொள்ளவில்லை.
'னெக்ஸ்ட்' என்று பியூன் அழைத்ததும் இண்டர்வியூ அறைக்குள் நுழைந்தான் அருண்.
அதிர்ச்சியில் உறைந்து போனான். உள்ளே சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவர்
அவன் பஸ்ஸில் கடிந்து கொண்ட பெரியவர் சிரித்துக் கொண்டே சொன்னார்: 'நமது நிதி
நிறுவனத்தின் கேஷியர் வேலைக்கு உன்னைப் போன்ற ஈவு, இரக்கம் இல்லாதவர்கள்
தான் லாயக்கு. யூ ஆர் அப்பாயிண்டட்."
|
ஏக்கம் | |
  ரமேஷின் பாஸ் சுந்தரத்தின் புது வீட்டைப் பார்க்கிற ஆசையில் ரதி, ராகுல் இருவரையும்
அழைத்து வந்துவிட்டாளே தவிர, ரம்யாவுக்கு உள்ளுர பயம்.
இரண்டும் கெட்டான் குழந்தைகள். வீட்டிலே அடிக்கிற லூட்டி தாங்க முடியவில்லை.
இங்கே வந்து....
அன்புடன் வீட்டைச் சுற்றிக் காட்டினார்கள் சுந்தரம் தம்பதிகள்.
சுவர்களில் அழகிய ஓவியங்கள். பூக்கிண்ணங்களில் அடுக்கப்பட்ட அன்றலர்ந்த மலர்கள்,
க்யூரியோக்கள்,பளிச்சென்று சுத்தமாக இருந்தது வீடு.
'நம்ம வீடும் இருக்கே' என்று ரமேஷ் தாழ்ந்த குரலில் அலுத்துக்கொண்டது நியாயமானதுதான்
என்று ரம்யா நினைத்தாள்.
கண்ணாடி டம்ளரில் ஐஸ் குலுங்க ஜுஸ் வந்தது. மறுநிமிடம் 'பணால்'. ராகுல் டம்ளரைக்
கீழே போட்டு உடைத்துவிட்டு திருதிருத்தான். ரதி பூக்கிண்ணத்தைச் சாய்த்து தண்ணீரைக் கொட்டி
விட்டு பயத்துடன் பார்த்தாள்.
"கிளம்பறோம் சார்... சனியன்களுக்கு சுத்தம்னா என்னன்றதே தெரியாது" கோபத்துடன் எழுந்த
ரமேஷை சுந்தரம் உட்காரச் சொன்னார்.
"குழந்தைங்க அப்படித்தான் இருக்கும். இந்த
அறையை அசுத்தபடுத்தி - அலங்கோலமாக்க ஒரு குழந்தை இல்லையேன்னு நாங்க
ஏங்கிக் கிட்டிருக்கோம்..." அவர் குரல் கனத்தது.
|
|
கோபம் | |
  வீட்டினுள் நுழைந்த சங்கரன், அறையில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த குமாரின்
பிடரியைப் பிடித்துக் குனிய வைத்து, முதுகில் மொத்து மொத்து என்று மொத்த ஆரம்பித்தார்!
"ஏங்க.... வந்ததும் வராததுமா பிள்ளையைப் போட்டு ஏன் இப்படி அடிக்கிறீங்க?"
"
இன்னிக்கு ஸ்கூல்லே இவன் என்ன பண்ணினான் தெரியுமா? நான் பாடம்
நடத்திக்கிட்டிருந்தபோது பக்கத்துப் பையன்கிட்டே பேசிக்கிட்டிருந்தான். கிளாஸ் ரூமுக்கு வெளியே
நிறுத்தி வைச்சேன். அங்கேயிருந்து கிளாஸ்லே இருக்கிற பையன்கள்கிட்டே ஜாடை காட்டிச்
சிரிச்சுக்கிட்டிருக்கான்!"
"அங்கேயே நாலு சாத்து சாத்த வேண்டியதுதானே?"
"முடியாதே! மாணவர்களை ஆசிரியர் அடிக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கு.
அது தெரிஞ்சுதானே இவன் ஆட்டம் போட்டிருக்கான். நல்ல வேளையா, பெத்தவங்க பிள்ளைகளை
அடிக்கக் கூடாதுன்னு சட்டம் இன்னும் வரலே!அதனால்தான் வாத்தியாரா செய்ய முடியாததை அப்பனா
செய்யறேன்!".
|
|
இரவல் | |
  அஞ்சல் அலுவலகங்கலிலும், வங்கிகளிலும் இரவல்
கேட்பவர்களின் தொல்லை தாங்க முடிவதில்லை.
குறிப்பாக பேனா.இங்க் பேனா இருந்த காலங்களில்,மறக்காமலிருக்க மூடியைக் கழற்றி
வைத்துக் கொண்டு கொடுப்பார்கள்.இப்போதைய பால்-பாயின்ட் யுகத்தில் என்ன செய்வது?
வங்கியில் லோன் அப்ளிகேஷன் படிவத்தை வாங்கிய நான், இப்படிப்பட்ட நபர்களிடமிருந்து தப்பிக்க,
வெளியே நின்று கொண்டிருந்த ஒரு சைக்கிளின் ஸீட்டில் வைத்துப் பூர்த்தி செய்யத் துவங்கினேன்.
என்னைப் போலவே வேறு சிலரும் நின்று எழுதிக் கொண்டிருந்தனர்.லேசாக ஒரக்கண்ணால் பார்த்தபோது,ஒருவர் காகிதங்களும் கையுமாக வருவது தெரிந்தது.
நான் எழுதுவதிலேயே கவனமாக இருப்பதுபோல் நடித்தேன். வேறு யாரிடமும் கிடைக்காததாலேயோ என்னவோ,
மனிதர் என்னருகில்தான் வந்து நின்றார்.பார்க்காத மாதிரி நானும் என் வேலையைத் தொடர்ந்தேன்.
அநேகமாகப் படிவத்தின் கடைசிப் பக்கத்திற்கு நான்
வந்துவிட்டிருந்நபோது,"எக்ஸ்கியூஸ் மீ.....மேடம்" என்றார் அவர்.
ஒரு வெறுப்பான பார்வையுடன் தலை நிமிர்ந்தேன்.
"என்னோட சைக்கிளைக் கொஞ்சம் கொடுக்க முடியுமா மேடம்?
அர்ஜென்ட்டா போக வேண்டியிருக்கு"."
|
|
தாத்தா | |
  தாத்தாவின் சதாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது. புதுப்பட்டுடுத்தி அவர்களை அமர்த்தி,
பொன்னும், பொருளும் வைத்துக் கொடுத்து எல்லோரும் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கி, அட்சதை
தூவி, வாயார, மனமார அந்த வாழ்வாங்கு வாழ்ந்த தம்பதி வாழ்த்த,அங்கே நிறைவும், நெகிழ்ச்சியும்,
சிலிர்ப்பும், மகிழ்ச்சியும் வெள்ளமாய் வழிந்தது.
ஆனாலும் தாத்தாவின் முகத்தில் ஏதோ ஒரு குறை.
"என்னடா வைத்தியநாதா, நல்லா இருக்கியாடா? இப்போதுதான் அபிஷகம் ஆச்சா; ஏண்டா
என்னவோ போல் இருக்கே? நேத்திக்கு கொஞ்சம் ஒடம்பு ஆகலைடா! அதான் வரமுடியலை.
ஒண்ணும் நெனச்சுக்காதேடா!" என்று வார்த்தைக்கு ஒரு 'டா' போட்டு உரிமையோடு
அழைத்துக்கொண்டு, தாத்தாவின் அண்ணன் எண்பத்து நான்கு வயது சதாசிவமும்,
அவர் மனைவி பர்வதம் மாளும் வந்திறங்கினர், கூண்டு வண்டியில்.
"இப்பதாண்ணா என் குறை தீர்ந்தது. அத்தனை பேரும் என் கால்ல விழுந்து
ஆசிர்வாத்ம் வாங்கினாங்க. நான் விழுந்து வணங்க எனக்கு மூத்தவங்க இல்லையேன்னு
விசனமா இருந்தது. இப்ப எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? ரெண்டு பேரும் சேர்ந்து
நில்லுங்க. நாங்க நமஸ்காரம் பண்ணிக்கிறோம்!" என்று இவர்கள் இருவரும் விழுந்து வணங்க,
அவர்கள் ஆசி வழங்கினர்.
அண்ணன் திருநீறு பூச, தாத்தா முகத்தில் கவலை ரேகை மறைந்து
ஆனந்தம் தாண்டவமாடியது.
| |
more stories...
|
|
|
Star Photo |
|
|
Joke |

|
|
|
Copyright © 2006 CineChips.com All Rights Reserved.
|
|